சென்னை,ஜூன். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சமூக பாதுகாப்பு மாநாடு ஜூலை 24 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெரியமேட்டில் மாநாட்டு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது
சென்னை மண்டல தலைவர் பக்கீர் முஹம்மது தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக் ராஜா, மக்கள் தொடர்பாளர் அப்துல் ரஜாக், மண்டலச் செயலாளர் அஹமது முகைதீன் முன்னிலை வகித்தனர்.
வட சென்னை மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது மாநாடு அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.
தென்சென்னை மாவட்டத் தலைவர் அபுபக்கர் சாதிக் நன்றி கூறினார்.
மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது பேசியதாவது, மக்களாட்சியை பாதுகாக்க நாடு முழுவதும் மக்கள் திரள் நிகழ்ச்சிகளையும், மாநாடுகளையும் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைமை தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை மண்டலம் சார்பில் எதிர்வரும் ஜூலை 24 அன்று மாபெரும் சமூக பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இன்று மாலை சென்னை மண்ணடியில் மாநாட்டு பிரச்சார பொதுக்கூட்டம் துவங்க இருக்கிறது.
நமது நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழலில் இதுபோன்ற சமூக பாதுகாப்பு மாநாடுகள் மிகவும் அவசியமானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடிய ஆட்சியாளர்கள் மக்களுக்கான சுதந்திரத்தையும், நீதியையும், பாதுகாப்பையும், உரிமைகளையும் பறித்து வருகின்றனர்.
மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி அரசியல் அமைப்பு சாசன சட்டத்திற்கு விரோதமான முறையில் சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது. முஸ்லிம்களும், தலித்துகளும், கிறிஸ்தவர்களும், ஜனநாயகவாதிகளும் குறிவைக்கப் படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நமது நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாக்க நாட்டு மக்கள் முன் வர வேண்டும். அதற்கான மக்கள் ஒன்றுகூடல் தான் இந்த மாநாடு. சமீபத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. எனவே சமூகத்தில் அனைத்து தரப்பினரும் சென்னையில் நடைபெற உள்ள சமூக பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டின் நோக்கத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment