ரயில் சேவையிலும் தடம் பதித்த
எஸ் ஆர் எம் பி ஆர் குழுமம்
சென்னை, எஸ் ஆர் எம் பி ஆர் குளோபல் ரயில்வேஸ் சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து சீரடிக்கு செல்லும் முதல் ரயில் சேவையை டாக்டர் பாரிவேந்தர் எம் பி, எஸ் ஆர் எம் குழு சேர்மன் ரவி பச்சமுத்து ஆகியோர் மலர் தூவி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஐஜேகே கட்சியின் தலைவரும் எஸ் ஆர் எம் குழுமத்தின் நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ் ஆர் எம் குழும சேர்மன் ரவி பச்சமுத்து முன்னிலை வகித்தார். தென்னக ரயில்வே வர்த்தக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர், எஸ் ஆர் எம் பிஆர் குளோபல் ரயில் சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது என்றும், தங்கள் குழுமம் பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் சிறப்பான பெயரை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்
தற்போது, இந்திய அரசு பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், போக்குவரத்து துறையில் எஸ் ஆர் எம் குழுமத்திற்குள்ள அனுபவத்தின் அடிப்படையில், ரயில் சேவையை வழங்க நான்கு ரயில்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எந்த தொழிலில் ஈடுபட்டாலும், எஸ் ஆர் எம் குழுமம் மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று கூறிய டாக்டர். பாரிவேந்தர், அதுபோன்றே எஸ் ஆர் எம் பி.ஆர் குளோபல் ரயில்வேயும் மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் என தெரிவித்தார்.
மேலும், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த எஸ்ஆர்எம் ஆம்னி பஸ் சேவைகள் மீண்டும் துவக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்
இன்று ஷிர்டிக்கு செல்லும் இந்த ரயிலைத் தொடர்ந்து, மே 15ல் நாகர்கோயிலில் இருந்து கோவாவிற்கும், மே 21ல் திருச்சிராப்பள்ளியில் இருந்து கோவாவிற்கும், ஜூன் 6ல் நாகர்கோயிலில் இருந்து வாரணாசிக்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தொடர்ந்து, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அனைத்து சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மையங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும். பயணத்தின் போது உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களில் போக்குவரத்து வசதி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் குழும ரயில் சேவையை மக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு டாக்டர். பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment