சென்னை சமூகப்பணிக் கல்லூரி மாணவர்களுக்கு விருது




சென்னை, 2023, ஏப்ரல்,30 -  சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் வெகுசிறப்பாக நடந்தது. விழாவில் டாக்டர் ஆர் நடராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் லட்சுமிபிரியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.
இந்த விழாவிற்குக் கல்லூரித் தலைவர் கே.ஏ மேத்தியூ தலைமையில் நடைபெற்ற விழாவில்  கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் ராஜா சாமுவேல் ஆண்டு அறிக்கையை வாசித்தார். தேசியத் தகுதித் தேர்வில் (பேராசிரியர்) பதினொரு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பதைக் குறிப்பிட்டார். ஆய்வுத் துறைக்குப் பெருமை சேர்த்த பேராசிரியர்கள் பாராட்டுப் பெற்றனர் என்பது கூடுதல் சிறப்பு  தமிழ்மொழியில் தனது உரையைத் தொடங்கிய டாக்டர் ஆர். நடராஜ், சமூகப்பணியில் கரைந்து விடும் போது நமக்கான அடையாளம் கிடைத்துவிடும் என்றும், அமைதியான மனதில் அற்புதமான சிந்தனை மலரும் என்றும், முடிவுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதற்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியதுடன், உலகம் முழுக்க இக்கல்லூரி மாணவர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர் என்றும் மனதார பாராட்டினார். எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள வாழ்க்கைத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி விடைபெற்றார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ஜி. லட்சுமிபிரியா பேசுகையில், தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் மிக முக்கியம் என்று சொல்லி மாணவர்களின் கவனத்தை ஈர்த்தார். புதிய சிந்தனை, சிறந்த முடிவெடுத்தல், சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ளுதல் ஆகியவை உங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்ற நம்பிக்கைச் சொற்களுடன் தன் உரையை முடித்துக் கொண்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் சார்பில் ஜி. லட்சுமிபிரியா தலைமையில் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம் இக்கல்லூரியில் தொடங்குவதற்கு ஏற்பாடானது. கல்வி வழியாகத் தங்கள் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்குக் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி நிதி இயக்குநர் ஜான் ஐக்ரியா ஆகியோர் விருது வழங்கிக் கௌரவித்தனர்.
கல்லூரி முகப்பில் கம்பிரமாகத் தோன்றும் நிறுவனர் சிலைக்கு மாலை அணிவித்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக அமைந்த ஆண்டுவிழாவில் நல்லதொரு வரவேற்புரையை நிகழ்த்தினார் சமூகப்பணித் துறைத்தலைவர் முனைவர் எஸ். குணவதி கல்லூரிப் புலமுதன்மையர் முனைவர் ஆர் சுபாஷினி சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். மாணவர் மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் கோகுல் கிருஷ்ணா நன்றியுரை வழங்கினார். தமிழ்த்துறை முனைவர் சி.ஆர். மஞ்சுளா மற்றும்  மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments