இந்திய நீச்சல் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம்

சென்னை, மே.22, இந்திய நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் அவர்கள் 2வது முறையாக தலைவராக தேர்வு!
இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.என். ஜெயப்பிரகாஷ், பொதுச்செயலாளராக குஜராத்தைச் சேர்ந்த மோனல் சோக்ஷி ஆகியோர் மீண்டும் தேர்வு பெற்றார்.

இந்திய நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் 2023 -2027 ஆம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.


இதில் தலைவராக ஆர்.என்.ஜெயப்பிரகாஷ், பொதுச்செயலாளராக மோனல் சோக்ஷி ஆகியோர் 2வது முறையாக தேர்வு பெற்றனர்.
பொருளாளராக சுதேன் நக்வான்கர்(கோவா), துணைதலைவர்களாக ராஜ்குமார்(டெல்லி), அனில் வியாஸ்(ராஜஸ்தான்), சதீஷ்குமார்(கர்நாடகா), பாஸ்கர் தாஸ் (அசாம்), அனில் காத்ரி(ஹரியானா) ஆகியோரும், இணை செயலாளர்களாக சீமா மேரோத்ரா(உத்தரகாண்ட்), டி.எஸ்.முரளிதரன்(கேரளா), எம்.லோகேஸ்வர் சிங் (மணிப்பூர்), லட்சுமி சந்திர மஹாகுர்(ஒடிசா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் பிறகு ஆர்.என். ஜெயபிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது:

இந்தியாவிலிருந்து திறமைவாய்ந்த வீரர், வீராங்கனைகள் பலர் உருவாகி வருகின்றனர். அவர்களில் பலர் இப்போது வெளிநாடுகளில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் பங்கேற்று சர்வதேச போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

வாட்டர் போலோ, டைவிங் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சர்வதேச பயிற்சியாளர்களால் போட்டியாளர்கள் உருவாக்கப்படுவார்கள்.

இந்தியா முழுவதும் 20,000 நீச்சல் போட்டியாளர்கள் உள்ளனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கு மேலாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் 11 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிகள் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளனர்.
மத்திய அரசு நீச்சல் பயிற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. மேலும் மத்திய அரசிடம் இருந்து சலுகைகள் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை விளையாட்டுத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நீச்சல் விளையாட்டில் நல்ல மேம்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தற்போது 30 நீச்சல் குளங்கள் உள்ளன. அதில் சென்னை, கோவை, கடலூர், மதுரை ஆகிய நான்கு இடங்களில் சர்வதேச போட்டியாளர்கள் பயிற்சி பெறும் தரத்தில் உள்ளது.

இந்திய நீச்சல் சம்மேளனத்தின் சார்பில் பல மாநிலங்களில் உள்ள நீச்சல் மையங்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதே போல் சென்னையில் வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தையும் எஸ்.எப்.ஐ. ஏற்று அங்கு அகாடமி அமைத்து சர்வதேச நீச்சல் வீரர், வீராங்கனைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீச்சல் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாத வகையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு அது தொடர்பாக புகார்கள் ஏதும் எழுந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் டைவிங், வாட்டர்போலோ ஆகிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்று ஆர்.என்.ஜெயப்பிரகாஷ் கூறினார்.இந்த பேட்டியின் போது நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Comments