பாஜக அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜக அரசை கண்டித்து
எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை.15, இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில், பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் ஏ.கே.கரீம், ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத் மற்றும் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டல நிர்வாகிகள் மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.   
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கோபண்ணா, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சிபிஐ மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ் எம்.எல்.ஏ., விசிகவின் கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் சிபி சந்தர், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜமாத்துல் உலமா சபை வழிகாட்டு உறுப்பினர் மெளலவி தர்வேஷ் ரஷாதி மற்றும் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் மாநில பேச்சாளர் மாரிமுத்து ஆகியோர் ஒன்றிய அரசின் பொதுசிவில் சட்ட முயற்சிக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், “இந்தியா என்பது பல்வேறு கலாச்சார, இன, மத மற்றும் மொழியியல் குழுக்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். இவர்கள் திருமணம் உள்ளிட்ட வாழ்வியல் நடைமுறைகளில் தத்தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் சொந்த பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அதற்கான உரிமையை வழங்கியுள்ளது. இந்த சூழலில் ஒரே நாடு, ஒரே மொழி என இந்த தேசத்தை ஒற்றைக் கலாச்சார தேசமாக மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜண்டாவை பின்பற்றி, பல்வேறு மதங்கள், சாதிகள், இனங்கள், மொழிகளைக் கொண்ட மக்கள் வாழும் தேசத்தில் ஒரே சிவில் சட்டம் கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு தங்களது தேர்தல் வாக்குறுதியான பொது சிவில் சட்டம் நோக்கி காய்களை நகர்த்தி வருகின்றது. அதற்காக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையில் 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 21 வது சட்ட கமிஷன் மூலம் அதற்கான திட்டமிடல் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டது. அப்போதே அதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. இருப்பினும் தொடர்ந்து இரண்டு ஆண்டு காலம் ஆய்வுகளை மேற்கொண்ட சட்ட கமிஷன், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், தற்போதைய நிலையில் இந்திய நாட்டுக்கு பொது சிவில் சட்டம் அவசியமற்றது, விரும்பத்தக்கது அல்ல என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டது. இது மோடி அரசுக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்தியாவின் 21வது சட்ட ஆணையம் இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவையில்லை என கூறிய நிலையில், 22வது சட்ட ஆணையமும் பொதுசிவில் சட்டம் குறித்து கருத்துகளைக் கேட்டுள்ளது. அதேசமயம் எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யவும் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒரேகுரலில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள மத்திய பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருக்க முடியாது என்று கூறி பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி கூறியது போல இந்த நாட்டில் இரு வகை சிவில் சட்டங்கள் பின்பற்றப்படவில்லை, மாறாக இந்தியாவில் பல்வேறு வகைப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு கொண்டு இருக்கின்றன. மதங்கள், சாதிகள், இனங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் வரை வெவ்வேறு நடைமுறைகள் தான் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவைகளை மறைத்துவிட்டுத்தான் தேர்தல் அரசியலுக்காக இந்துக்கள்-முஸ்லிம்கள் என பொருள்படும் வகையில் இரு சட்டங்கள் என பொய்யுரைத்துள்ளார். 

பொதுசிவில் சட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் அஜண்டா. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் இந்த நாட்டில் வாழும் மக்கள் ஆண்டாண்டு காலம் தங்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் பின்பற்றிவரும் வாழ்வியல் நடைமுறைகளில் பல சிக்கல்கள் உருவாகும் என்பதால் தான், 21வது சட்ட கமிஷன் மிகத்தெள்ளத் தெளிவாக இந்தியாவுக்குப் பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது இல்லை என கூறியிருந்தது.

ஆகவே, தேசத்தின் பன்முகத் தன்மையை குலைக்கும், பாஜக அரசின் பொதுசிவில் சட்ட நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப வேண்டும். இத்தகைய வகுப்புவாத நடவடிக்கைக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும், ஒன்றிய அரசின் முயற்சியை அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவரும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்.” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதோடு, ஒன்றிய பாஜக அரசின் முயற்சிக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பினர்.

Comments