முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை (Mega Handicrafts Exhibition-cum-Conference) தொடங்கி வைத்தார். மேலும், கைவினைத் தொழிலுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.
இந்த மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், தஞ்சாவூர் ஓவியம், சுடு களிமண், களிமண் பானை வகைகள், கலம்காரி, மூங்கில் வேலைப்பாடுகள், நார் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியம், தோடா சித்திர தையல் பொருட்கள், வாழைநார் பொருட்கள், குறும்பா ஓவியம், மர சிற்பங்கள், கற்சிற்பம் போன்ற பல்வேறு கலைப் பொருட்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், இக்கண்காட்சியில் கைவினைப் பொருட்கள் துறையில் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், கைவினைப் பொருட்கள் துறையில் புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துதல், கைவினைஞர்களின் குழுமங்கள் நிதி உதவி பெற அணுகு முறைக்கான வழிகாட்டுதல், கைவினைப் பொருட்களின் புவிசார் குறியீடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும், கைவினைஞர்களின் தொழில் மேம்பாட்டிற்கான பல்வேறு கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன.
Comments
Post a Comment